Connect with us

#24 Exclusive

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை !

Published

on

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கை !

தூத்துக்குடி:-

காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் காய்ச்சல் பிரிவு, ஆண்கள், பெண்கள் காய்ச்சல் பிரிவு மற்றும் டெங்கு சிறப்பு காய்ச்சல் வார்டு ஆகிய பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூ தலைமையில் நேற்று மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர்கள் அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை கண்டறிந்து தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு உரிய நேரத்தில் மருந்துகளை வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் போ.சின்னப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் அரசு டெங்கு காய்ச்சல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை சுகாதாரத்துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் சிறப்பு வார்டு, குழந்தைகள் காய்ச்சல் வார்டு உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
காய்ச்சல் மற்றும் பல்வேறு காரணங்களால் 47 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 நபர்களுக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையான மருந்துகளை வழங்கி வருகிறார்கள். தற்போது இவர்கள் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் தாமாக மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சலை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனை வருகை தந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், வேலூர் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிக அளவில் உள்ளார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே தலைமை செயலாளர் தலைமையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், முதலமைச்சர் தலைமையிலும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வாரத்தில் இரண்டு முறை காணொலி காட்சி மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார துறை மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து குறும்படங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஒரு நிமிடத்திற்குள் கண்டறியும் வகையில் ரூ.25 கோடி மதிப்பில் 860 கருவிகள் 2 வருடங்களுக்கு முன்பாக வாங்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடும் வகையில் தரமான பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் அம்மாவின் அரசு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share