பாமக நிறுவனர் இராமதாஸ் பிரதமருக்கு கடிதம் !

பாமக நிறுவனர் ராமதாஸ் அச்சு ஊடகங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் : அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு :- கடிதத்தின் தமிழாக்கம்
அன்புள்ள பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு,

Loading...

வணக்கம்!

பொருள்: கொரோனா வைரஸ் நோய் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள அச்சு ஊடகங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோருதல்- தொடர்பாக

Loading...

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் சுகாதார அடிப்படையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது தடுக்கப்பட்டு விட்ட போதிலும், பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு துறையினரின் பாதிப்பை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், அப்பாதிப்பை போக்க உதவி செய்யும்படி கோருவதற்காகவும் தான் இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரி செய்வதற்காகவும் தாங்கள் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தின் அசைக்க முடியாத தூணாக திகழ்வது ஊடகங்கள் தான். நாட்டு நடப்புகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கும் பணியை ஊடகங்கள் தான் மேற்கொள்கின்றன. எந்த நாட்டில் ஊடகங்கள் மிகவும் வலிமையாக இருக்கின்றனவோ, அந்த நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் இந்திய ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அச்சு ஊடகங்களை நடத்துவது சவாலானதாக மாறியிருக்கிறது.

அச்சு ஊடகங்களின் முதன்மை வருவாய் செய்தித்தாள்களின் விற்பனையிலிருந்து கிடைப்பதல்ல… விளம்பரங்களின் மூலம் கிடைப்பது தான் என்பதை தாங்கள் அறிவீர்கள். செய்தித் தாள்களின் தயாரிப்பு செலவு அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்பு செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும். எனவே, அச்சு ஊடகங்கள் தடையின்றி இயங்க வேண்டுமானால், அவற்றிற்கு தொடர்ந்து விளம்பரம் கிடைப்பது மிகவும் அவசியமாகும்.

பொருளாதார மந்தநிலை காரணமாகவும், பணப்புழக்கம் இல்லாததாலும் மக்களிடையே நுகர்வு என்பது அடியோடு குறைந்து விட்டது. இத்தகைய சூழலில் தனியார் விளம்பரங்கள் உடனடியாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. நிலைமை சீரடைந்து தனியார் விளம்பரங்கள் கிடைக்க இன்னும் ஓராண்டு வரை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு விளம்பரங்கள் தான் ஊடகங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் விளம்பர செலவுகள், சிக்கன நடவடிக்கையாக, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளன. இது ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.

மற்றொருபுறம், விளம்பரங்களை வெளியிட்ட வகையில் அச்சு ஊடகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.1500 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. அச்சு ஊடகங்களின் விளம்பர வருவாய் திடீரென முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் நிலுவைத் தொகையை வழங்கினால் தான் அச்சு ஊடகங்களால் நிலைமை சமாளிக்க முடியும்.

இந்தியாவில் பொருளாதார நிலைமை மேம்படும் வரை ஊடகங்கள் செயல்பட வேண்டுமானால் கீழ்க்கண்ட உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

  1. செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.
  2. அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
  3. அச்சு ஊடகங்களுக்கான அரசுi விளம்பரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அச்சு ஊடகங்களின் அமைப்புகள் தங்களிடம் முன்வைத்திருப்பதாக அறிகிறேன். இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் நெருக்கடியில் இருக்கும் போது அவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் இருப்பதால், மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி! இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*