வனப்பகுதியில் குறைவான உள்ள இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க அரசு நடவடிக்கை அமைச்சர் s. p வேலுமணி தகவல்

கோவை வனப்பகுதியில் குறைவாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Loading...

காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்ட காவேரி கூக்குரல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்து கோவை திரும்பிய ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

நீரின்றி அமையாது உலகு என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறினார். ஈஷா அறக்கட்டளை தலைவர் சத்குரு தொடங்கியுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் காவேரி நதி புத்துயிர் பெற்று விவசாயிகளின் வாழ்வு மேம்படும். பல்வேறு நகரங்களில் பயணம் செய்து அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசு உறுதுணையாக இருந்தது. தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். நாட்டிலேயே அதிக மரங்கள் நடுவது என்றால் அது ஈஷாவாகாகத் தான் இருக்கும்.

Loading...

ஈசா யோகா மையம் சார்பில் சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம் என பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எனது தொகுதியில் ஈசா யோகா மையம் அமைந்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது.
தமிழக அரசு சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பல வருடங்களாக லட்சக்கணக்கான மரங்களை தொடர்ந்து நட்டு வருகின்றது. புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த அற்புத திட்டமான மழைநீர் சேகரிப்பில் இந்தியாவிலேய முதன்மை மாநிலமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மரங்கள் இருந்தால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். வனப்பகுதியில் மரங்கள் குறைவாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகள் நடவும், மரக்கன்றுகள் வளர்க்கவும், பராமரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எங்களது துறை சார்பில் தேவையான மரக்கன்றுகளை வழங்க உள்ளோம். அத்துடன் அவர் செய்து வரும் இந்த பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இதை தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை தலைவர் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-

காவேரி என்பது ஒரு நதி இல்லை. 120 உபநதிகள் இணைந்து காவேரி நதியாக ஓடுகிறது.இதில் தற்போது 35 கிளை ஆறுகளில் மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. கனமழை வந்தால் மட்டுமே மற்ற ஆறுகளில் தண்ணீர் வரும். இதற்கு காரணம் ஆக்கிரமிப்பு தான். தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் அதை சேமிக்க வேண்டும். இதை புரிந்து கொண்டால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. காவேரி கரையோரப் பகுதியில் 242 கோடி மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் காவேரியாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும்‌.

அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தாலே போதும் தண்ணீர், சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும். எது நன்றாக உள்ளதோ அதை சொல்ல வேண்டிய மன நிலைமை நமக்கு வர வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போல சாலை போக்குவரத்து வசதி தமிழ்நாட்டில் சிறப்பாக உள்ளது.

இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாரதிய வித்யா பவன் தலைவர் பிகே.கிருஷ்ணராஜ் வானவராயர், சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமி நாராயணசாமி, கொடிசியா தலைவர் இரா.ராமமூர்த்தி, கங்கா மருத்துவமனை இயக்குநர் ராஜசேகர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன், கொ.ம.தே. கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*