Connect with us

#24 Exclusive

கருணாநிதி கிழித்தது என்ன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் கடும் தாக்கு ?

கருணாநிதி கிழித்தது என்ன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் கடும் தாக்கு ?

காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழ் மொழிக்காகவும், தமிழ் சமுதாயத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்று தனது பேச்சால் ஏழை எளிய மக்களின் உள்ளங்களை கவர்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். சிறந்த பேச்சாளர், வசன கர்த்தா, நாடக நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்.

Loading...

சமுதாய சீர்திருத்தங்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ வேண்டி பாடுபட்டவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரை துடைக்கவே வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை ஒருங்கே பெற்றவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்கள் இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் பிரமிக்கும் வகையில் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக கழகத்தை வழிநடத்தினார்கள்.

Loading...

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின்பு புரட்சித்தலைவரால் முதல்வரான கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் கொள்கையான தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ் மொழிக்கும் பிறரால் களங்கம் ஏற்படாவண்ணம் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து தடம்மாறினார்.
இதனை எச்சரித்ததனால் புரட்சித்தலைவரை கருணாநிதி கட்சியைவிட்டு நீக்கினார். அண்ணாவின் கொள்கையை காப்பாற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி அண்ணாவின் உருவத்தை கொடியில் பதித்து, அண்ணாவின் கொள்கைகளை பட்டி தொட்டியெங்கும் பரப்பினார் புரட்சித்தலைவர். 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து புரட்சித்தலைவர் கருணாநிதியை கோட்டை பக்கம் தலைவைத்து படுக்க முடியாத நிலையை உருவாக்கினார்.

புரட்சித்தலைவரின் மறைவிற்கு பின்பு 18 லட்சமாக இருந்த கழக உறுப்பினர்களின் எண்ணிக்கையை இதயதெய்வம் அம்மா அவர்கள் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, இந்த கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து பல்வேறு இன்னல்களை தாங்கி சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய இயக்கமாக கழகத்தை மாற்றிக் காட்டினார். நாடு சுதந்திரம் பெற்ற பின்பு தமிழகத்தில் நீண்டகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே. இத்தகைய பெருமை வேறு எந்த இயக்கத்திற்கும் கிடையாது.
இதயதெய்வம் அம்மா அவர்கள் மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் கிடைத்திட வழிவகை செய்தார்.

சுமார் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு “தொலைநோக்கு திட்டம் 2023” என்ற திட்டத்தை இதயதெய்வம் அம்மா அவர்கள் பிரகடனப்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டினார். 2023-ல் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் எனவும், சராசரி ஆண்டு வருமானம் உயர்ந்திட வேண்டும் என்ற அடிப்படையிலும் “தொலைநோக்கு திட்டம் 2023” திட்டத்தை கொண்டு வந்தார்.
அதேபோல் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் தீட்டினார்கள் இதயதெய்வம் அம்மா அவர்கள். தமிழகத்தில் 13.5 லட்சம் குடிசை வீடுகள் இருக்கின்றன. தற்போது தரமான கான்கிரீட் வீடுகள் சுமார் 6 லட்சம் பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் அற்ற மாநிலமாக திகழும்.

அரசு நிதியில் கல்வித் துறைக்கு மட்டும் 4-ல் ஒரு பங்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் கல்வித் துறைக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை. 2013-ம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்கள் 28 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்காக நிதி ஒதுக்கினார். தற்போது அது 37 ஆயிரம் கோடியாக அது உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலணி, மிதிவண்டி, மடிகணினி உட்பட எண்ணற்ற சலுகைகள் வழங்கினார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதன் விளைவாக இன்று இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் இரண்டாவது மாநிலமாக முன்னேறி உள்ளது. பேரறிஞர் அண்ணா வழிகாட்டியபடி தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும்.

பெண்களுக்கு இதயதெய்வம் அம்மா அவர்கள் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். 2 பெண் குழந்தைகள் பிறந்தால் நிதியுதவி. பெண்கள் திருமண நிதியுதவி 25 ஆயிரம் வழங்கியதோடு தாலிக்கு தங்கமும் வழங்கினார். அதோடு பட்டதாரி பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் திருமண நிதியுதவியும் வழங்கினார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டங்கள் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகள் கூட இத்தகைய திட்டங்களை செயல்படுத்தியதில்லை. இப்படி பெண்களுக்கு படிப்பதற்கும், திருமணத்திற்கும் என்று நிதியுதவிகள் வழங்கியதோடு மகப்பேறு காலத்திலும் 18 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார். அது மட்டுமின்றி முதியோர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் என மாதந்தோறும் அவர்களுக்கு ரூபாய் 1000 நிதியுதவி வழங்கினார்கள். மேலும் அம்மாவின் அரசு சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு மட்டும் அரசு நிதியில் 48 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து மக்கள் நலனில் கழக அரசு கண்ணும்கருத்துமாக செயல்படுகிறது. இப்படி பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்ததனால்தான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழக அரசே மீண்டும் ஆட்சி புரியும் வாய்ப்பை தமிழகம் மக்கள் வழங்கினார்கள். இதன் மூலம் தமிழகத்தில் 32 ஆண்டுகள் கழித்து ஒரே அரசு மீண்டும் ஆட்சி புரியும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதயதெய்வம் அம்மா அவர்களின் அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாக திகழ்கிறது. இஸ்லாமிய பெருமக்களுக்கு ஹஜ் பயணம் செய்ய மத்திய அரசு நிதியுதவி செய்வதை நிறுத்தியது. ஆனால் இதயதெய்வம் அம்மா அவர்கள் “மத்திய அரசு நிறுத்தினாலும் நாங்கள் நிதியுதவி அளிக்கிறோம்” என்று கூறி நிதியுதவி வழங்கினார்கள். அதே போல் கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் செல்வதற்கும் நிதியுதவி வழங்கினார்.
மக்கள் நலனை பாதுகாப்பதில் அம்மா அவர்கள் எப்படி தன்னை அர்ப்பணித்து கொண்டிருந்தார்களோ அதே வழியில் நாம் இன்றும் சிறிதும் தடம்மாறாமல் சென்றுக்கொண்டிருக்கிறோம்.

இததெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த அத்தகைய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். இதயதெய்வம் அம்மா கொண்டுவந்த திட்டங்களை மேலும் மெருகேற்றியுள்ளோமே தவிர எந்த திட்டத்தையும் கைவிட்டதில்லை. இதயதெய்வம் அம்மா அவர்கள் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், கரும்பு என பல்வேறு பொருட்களை வழங்கினார்கள். இதனை மேலும் மெருகேற்றும் வகையில் ரூ.1000 கழக அரசு வழங்கியது.

ஏழை எளியவர்களுக்கு முதலமைச்சர் எடப்படி கே.பழனிசாமி ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். ஸ்டாலின் அதனை தடுக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அவரால் அது முடியாது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தற்போது மீண்டும் அறிவித்துள்ளார்கள். நிச்சயமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடு சென்றதை ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். இதே ஸ்டாலின் 2009-ம் ஆண்டு கூவம் நதியை சீர் செய்வதற்காக நிதி திரட்ட சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறிவிட்டு சிங்கப்பூர் சென்றார். ஆனால் திரும்பிவந்த பின்பு அதை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் வெளிநாடு சென்று திரும்பிவந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூபாய் 8,830 கோடி முதலீடுகளை ஈர்த்து, 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு சுமார் 37 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளார்கள் என்பதனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2015-ம் ஆண்டு முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டினை இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்தினார். அந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 84 ஆயிரத்து 269 கோடி ரூபாய் முதலீடுகள் தற்போது வந்து சேர்ந்தன. இதனால் 1 லட்சத்து 61 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நாம் நடத்தினோம். 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்த்து, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு திட்டங்களை கழக அரசு கொண்டுவந்துள்ளது.

விவசாயத்தை எடுத்துக்கொண்டால் 8 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் கடும் வறட்சி ஏற்பட்டது. ஆனால் மீதம் உள்ள 6 ஆண்டுகளில் நெல் உற்பத்தியில் 1 லட்சம் டன்னுக்கு அதிகமாக உற்பத்தி செய்து மத்திய அரசின் கிரிஷ்கர்மான் விருதினை நாம் பெற்றோம். மருத்துவத் துறையில் நாம் முன்னோடி மாநிலமாக உள்ளோம். இப்போது யாரும் தனியார் மருத்துவமனைக்கு செல்வதில்லை. காரணம் இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த மருத்துவ காப்பீடு திட்டத்தினால் இன்று அனைவரும் அரசு மருத்துவமனையை நாடி செல்கின்றனர். இப்படி பல்வேறு நிலைகளில் நாம் உயர்ந்துள்ளோம்.

ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கனவு காண்கிறார். அது பலிக்கவே பலிக்காது. தஞ்சையில் பிறந்தேன் என பீற்றிக்கொண்ட கருணாநிதி 2007ல் முதலமைச்சராக இருந்தபோது காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசில் தி.மு.க. அங்கம் வகித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இதயதெய்வம் அம்மா அவர்கள் கருணாநிதியிடம் “காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை அரசு ஜெகட்டில் வெளியிட்டால்தான் அது நடைமுறைக்கு சாத்தியமாகும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் கருணாநிதி அதற்கு செவிசாய்க்கவில்லை.

பின்பு இதயதெய்வம் அம்மா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றவுடன் உச்சநீதிமன்றம் சென்று காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பினை பெற்றுத்தந்து அரசு ஜெகட்டில் வெளியிட்டார். 2011-ம் ஆண்டு நீட் தேர்வை கொண்டுவரவேண்டும் என்ற முடிவினை எடுத்தது மத்தியில் அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கம். அப்போது மத்திய அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்துவிட்டு ஸ்டாலின் இன்று நீட் தேர்வை எதிர்க்கிறார்? இது எந்த விதத்தில் நியாயம்? ஸ்டாலின் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்?
இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக கருணாநிதி நீலிக் கண்ணீர் வடிப்பார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் தீர்மானம் போடுகிறார் அது என்வென்றால் “நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனை கொடுங்கள். மற்றவர்களை அப்படியே விடுங்கள்” என்று சட்டப்பேரவையிலே தீர்மானம் போடுகிறார். ஆனால் மீண்டும் முதலமைச்சரான இதயதெய்வம் அம்மா அவர்கள் அந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்புகிறார். இதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு போராடியது யார் என்பது தெள்ளத்தெளிவாகியது.
2009-ம் ஆண்டு இலங்கையிலே போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது முதலமைச்சராக இருந்தது கருணாநிதிதான். அது மட்டுமின்றி மத்திய அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. போர் பீரங்கிகளை இலங்கை அரசுக்கு அனுப்புவதை அன்றைய தினம் தி.மு.க. ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு துரோகம்தான் செய்தார்கள். அப்படியிருக்க எப்படி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்? தி.மு.க.வினரை பார்த்து கேட்கிறேன் “உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறீர்களே?” தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தி.மு.க. கட்சியினர் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா சாப்பிட்டால் பணம் தருவதில்லை.

மாறாக பணம் கேட்டால் கடைகாரரை அடித்து உதைப்பது, கடையை உடைப்பது போன்ற அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்சார தட்டுப்பாடு, தினகரன் நாளிதழ் எரித்தது போன்ற அராஜகங்களை நடந்தேறியது. ஆனால் அம்மா அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மின்சார தட்டுப்பாட்டை நீக்கியதோடு மின்சார உற்பத்தியில் மிகை மின் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கினார்கள். இதுவல்லவா பொற்கால ஆட்சி. இனி வருகின்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி எந்த தேர்தல் என்றாலும் கழகம் அமோக வெற்றி பெறும். இது உறுதி.
இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending